குடியரசு
குடியரசு (Republic) என்பது வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். குடியரசு ஒன்றின் ஒழுங்கமைப்பு பல வகைகளில் வேறுபடக்கூடும். குடியரசுத் தலைவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பொறுத்தும், மரபுகளை ஒட்டியும், அப்பதவி வெறுமனே ஒரு அரசியல் சாராத சடங்கு சார்ந்த பதவியாகவோ, அல்லது பெரும் செல்வாக்குள்ளதும், பெருமளவு அரசியல் சார்ந்ததுமாகவோ இருக்கக்கூடும்.
குடியரசுகளின் இயல்புகள்
[தொகு]குடியரசின் தலைவர்
[தொகு]தற்காலக் குடியரசுகளில் அதன் தலைவர் குடியரசுத் தலைவர் அல்லது சனாதிபதி எனப்படுவார். மக்களாட்சி முறை பின்பற்றப்படும் குடியரசுகளில், குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார். சில குடியரசுகளில் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் இந்த முறை உள்ளது. சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவைகளால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்தியாவில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய முறைகள் உள்ள குடியரசுகளில் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் நான்கு தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை வேறுபடலாம். இவ்வாறான குடியரசுகள் சிலவற்றின் அரசியல் சட்டங்கள், ஒருவர் குறிப்பிட்ட எண்ணிக்கையான தடவைகளுக்கு மேல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படக்கூடாது என விதிப்பதும் உண்டு.
ஒரு நாட்டின் தலைவர் அந் நாட்டு அரசின் தலைவராகவும் இருப்பின், அது குடியரசுத் தலைவர் முறை (சனாதிபதி முறை) எனப்படும். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் இதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். குறைக் குடியரசுத் தலைவர் முறை உள்ள நாடுகளிலும், நாடாளுமன்றக் குடியரசுகளிலும், நாட்டுத் தலைவரே அரசுத் தலைவராகவும் இருப்பதில்லை. இவ்வாறான நாடுகளில் அரசுத் தலைவர் பிரதம அமைச்சர், பிரதம மந்திரி அல்லது பிரதமர் என அழைக்கப்படுவார். அரசின் கொள்கைகளையும், அரசையும் மேலாண்மை செய்யும் பொறுப்பு பிரதம அமைச்சருக்கு உரியது. சில நாடுகளில், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் தேர்வதற்கான விதிகள், அவ்விருவரும் வேறுவேறான கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கும் இடமளிக்கின்றன. பிரான்சில், ஆட்சியிலிருக்கும் அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலை "ஒத்துவாழ்தல்" (cohabitation) எனப்படுகிறது. ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்.
சுவிட்சர்லாந்து, சான் மரீனோ போன்ற சில நாடுகளில் நாட்டின் தலைமை ஒருவரிடம் இருக்காமல், பலரைக் கொண்ட ஒரு குழு அல்லது அவையிடம் இருக்கும். முற்காலத்தில் ரோமக் குடியரசு கொன்சல் எனப்படும் இரண்டு நாட்டுத் தலைவர்களைக் கொண்டிருந்தது. நாட்டின் ஆட்சிச் சபையினால் ஓர் ஆண்டுக்குத் தெரிவு செய்யப்படும் இவர்கள், மாதத்துக்கு ஒருவராக மாறிமாறிப் பதவியில் இருப்பர். பதவியில் இருப்பவர் அதிகாரத்தில் இருக்கும் கொன்சல் எனவும், மற்றவர் துணைக் கொன்சல் ஆகவும் இருப்பர். எனினும் துணைக் கொன்சலுக்கு, ஓரளவு சுதந்திரமாக இயங்கக்கூடிய உரிமையும், தடுப்புரிமையும் இருந்தது.
சில குடியரசுகளில், நாட்டுத் தலைவருக்கு சில அம்சங்களில் மன்னர்களை ஒத்த அதிகாரங்கள் இருப்பதும் உண்டு. சில குடியரசுகள், நாட்டுத் தலைவரை அவர் வாழும் காலம் வரைக்கும் பதவியில் இருத்துவது மட்டுமன்றி, வழமையான சனநாயக அமைப்பில் இருப்பதிலும் பார்க்க, கூடிய அதிகாரங்களை அவருக்கு அளிக்கின்றன. சிரிய அரபுக் குடியரசு இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும்.
இந்திய துணைக்கண்டம்
[தொகு]பண்டைய இந்திய துணைக்கண்டத்தில் மகாஜனபதம் என்ற பெயரில் பல அரசுகள் இருந்தற்கான சான்றுகள் உள்ளன.[1] மகாஜனபதம் என்பது பண்டைய இந்தியாவில் கி மு 600 முதல் கி மு 300 முடிய காணப்பட்ட அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். அங்குத்தர நிக்காய[2] போன்ற பண்டைய பௌத்த சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.[3] இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு குடியரசுகளாகும்.[4][5] கே.பீ. ஜெயஸ்வால் போன்ற சில இந்திய அறிஞர்கள், பூர்வீக இந்தியாவில் குடியரசு வடிவிலான பல அரசுகள் இருந்ததாக வாதிடுகின்றனர்.[6][7][8]
1815 ல் ஐரோப்பிய நாடுகள்.[9] முடியாட்சி நாடுகள் (55)
குடியரசு நாடுகள் (9)
|
1914 ல் ஐரோப்பிய நாடுகள்.[10] முடியாட்சி நாடுகள் (22)
குடியரசு நாடுகள் (4)
|
1930 ல் ஐரோப்பிய நாடுகள்.[11] முடியாட்சி நாடுகள் (20)
குடியரசு நாடுகள் (15)
|
1950 ல் ஐரோப்பிய நாடுகள்.[12] முடியாட்சி நாடுகள் (13)
குடியரசு நாடுகள் (21)
|
2015 ல் ஐரோப்பிய நாடுகள்.[13] முடியாட்சி நாடுகள் (12)
குடியரசு நாடுகள் (35)
|
குடியேற்ற விலக்கம்
[தொகு]குடியேற்றமாக இருந்த நாடு தன்னை அத்தகைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு விடுதலை பெறுவதே குடியேற்ற விலக்கம் ஆகும்.[14] எனவே குடியேற்ற விலக்கம் என்பது குடியேற்றவாதத்திற்கு நேரெதிரானது. சிலசமயங்களில் குடியேற்ற நாடு ஒன்றிற்கு முழுமையான தன்னாட்சி கிடைக்காது; மற்றொரு நாட்டின் அங்கமாகவோ அல்லது தன்னை குடிப்படுத்திய நாட்டுடன் இணைந்து அதன் அங்கமாகவோ ஆகலாம். இத்தகைய விலக்கம் அமைதியான உரையாடல்களின் தொடர்ச்சியாக நிகழலாம். சில நாடுகளுக்கு ஆயுதப் புரட்சிகள் மூலம் விடுதலை கிடைத்துள்ளது. இருப்பினும், குடியேற்ற விலக்கம் கைப்பற்றப்பட்ட புவியியல் பகுதிகளிலும் நிறுவனங்களிலும் "உள்நாட்டு இறையாண்மையில் வெளிநாட்டு ஆதிக்கத்தை நீக்குவது" மட்டுமல்லாது குடிபடுத்தப்பட்ட நாடு தாங்கள் கீழானவர்கள் என்ற குடியேற்றவாத நாட்டின் கருத்தியலை "உள்ளங்களிலிருந்து அகற்றுவதும்" இதன்பால் அடங்கும்.[15]
குடியேற்ற விலக்கம் என்பது மங்கோலியப் பேரரசு அல்லது உதுமானியப் பேரரசு போன்ற வழமையான பெரும் பேரரசுகள் உடைந்து உருவாகும் அங்கநாடுகளிலிருந்து மாறானது. பொதுவாக ஐரோப்பியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது குடியேற்ற விலக்கம் எனப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான குடியேற்ற விலக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இது 1947இல் இந்தியாவும் பாக்கித்தானும் பிரித்தானியப் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றதை யடுத்து தொடங்கியது. தொடர்ந்து ஆப்பிரிக்காவில் ஐரோப்பாவின் குடியேற்றங்களாக இருந்த பல நாடுகள் விடுதலைப் பெறத் தொடங்கின.
சமதர்மக் குடியரசு
[தொகு]சோசலிசக் குடியரசு அல்லது சமதர்மக் குடியரசு (socialist state அல்லது socialist republic), என்பது சமத்துவ சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசமைப்புச் சட்டப்படி நடத்தப்படும் ஓர் அரசு ஆகும். ஒரு தனிப்பட்ட நாட்டில் கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு அமையும் அரசு, சோசலிசக் குடியரசாக இருக்கும் என கார்ல் மார்க்ஸ் வரையறுக்கிறார். சோசலிசம் அல்லது சமதர்மம் என்ற சொல்லாட்சி, மார்க்சின் காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் அனைவருக்கும் வழங்கும் சமூகத்தை சோசலிச சமூகம் என அழைக்கின்றனர். இதனை லட்சியமாகக் கொண்டு, அதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குடியரசுகளே சோசலிசக் குடியரசுகளாகும். சோவியத் ஒன்றியம் உலகின் முதல் சோசலிச குடியரசாக இருப்பினும், 1871 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் மத்தியில், பிரெஞ்சு நாட்டில் அமைந்த பாரிஸ் கம்யூன் சோசலிச குடியரசுக்கான பண்பு நலன்களைக் கொண்டிருந்தது. இந்த அரசு மே 28, 1871 இல் கலைக்கப்பட்டது.[16]
- இன்றைய சோசலிச குடியரசுகள்
- சீன மக்கள் குடியரசு
- கியூபா குடியரசு
- வட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு
- வியட்நாம் சமத்துவ குடியரசு
ஆகிய நாடுகள் சமகால சோசலிச குடியரசுகளாக அறியப்படுகின்றன.
தாராண்மை குடியரசு
[தொகு]தாராண்மை குடியரசு (Liberal democracy) என்பது மக்களாட்சி முறையின் ஒரு வடிவம் ஆகும். 21 ஆம் நூற்றாண்டில் இவ்வகை குடியரசு உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தாராண்மை மக்களாட்சிக்கும், பொதுவுடமை மக்கள் குடியரசு அல்லது மக்கள் மக்களாட்சி போன்ற அரசாட்சி முறை வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சி, பங்கேற்பு மக்களாட்சி போன்ற வடிவங்களில் இருந்தும் இது பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. தாராண்மை மக்களாட்சி, பல்வேறு அரசியலமைப்பு வடிவங்களில் அமையக்கூடும். இது, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பிரான்சு போன்ற நாடுகளைப்போல் ஒரு குடியரசு அமைப்பில் அமையலாம். அல்லது ஐக்கிய இராச்சியம், எசுப்பெயின் போன்ற நாடுகளில் உள்ளது போல் அரசியல்சட்ட முடியாட்சி வடிவிலும் அமையலாம். இது, சனாதிபதி முறை, நாடாளுமன்ற முறை அல்லது இரண்டும் கலந்த முறை போன்ற அரசு முறைகளின் கீழும் அமைய முடியும்.
தாராண்மை குடியரசு என்பதில் உள்ள "தாராண்மை" என்பது, ஆட்சியில், அரசியல் தாராண்மையியம் என்னும் கருத்தியலைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது. தாராண்மை மக்களாட்சிகளில், அரச அதிகாரத்திடம் இருந்து தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இது முதன்முதலாக அறிவொளிக் காலத்தில் ஓப்சு (Hobbes), ரூசோ (Rousseau) போன்ற சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ 16 Mahajanapadas – Sixteen Mahajanapadas, 16 Maha Janapadas India, Maha Janapada Ancient India. Iloveindia.com. Retrieved on 2013-07-12.
- ↑ Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.
- ↑ Altekar, Anant Sadashiv (1 April 2002). State and Government in Ancient India. Motilal Banarsidass Publications. pp. 36–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1009-9. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
- ↑ Anguttara Nikaya I. p. 213; IV. pp. 252, 256, 261.
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Delhi: Pearson Education. pp. 260–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1120-0.
- ↑ http://www.britannica.com/eb/article-9074639/Vaisali Vaisali, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- ↑ Kulke, Hermann; Dietmar Rothermund (2004). A history of India. Routledge. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-32919-1.
- ↑ Sharma, RS. Aspects of Political Ideas and Institutions in Ancient India. Motilal Banarsidass Publ., 1999 p. xxix
- ↑ The உதுமானியப் பேரரசு and உருசியப் பேரரசு are counted amongst ஐரோப்பா. Counted as republics are the Swiss Confederation, the Free Cities of Hamburg, Bremen, Lübeck and Frankfurt, the Most Serene Republic of San Marino, the Republic of Cospaia, the Septinsular Republic and the German Confederation; however, member states of the German Confederation are also separately counted (35 monarchies).
- ↑ The உதுமானியப் பேரரசு and உருசியப் பேரரசு are counted amongst Europe.
- ↑ The Republic of Turkey is counted amongst Europe, the Union of Soviet Socialist Republics as a single republic, the Irish Free State as an independent monarchy (see also Irish head of state from 1936 to 1949), Vatican City as an elective monarchy, the Kingdom of Hungary as a nominal monarchy.
- ↑ The துருக்கி is counted amongst ஐரோப்பா, the Union of Soviet Socialist Republics as a single republic, the Free Territory of Trieste as an independent republic, வத்திக்கான் நகர் as an elective monarchy, the Spanish State as a nominal monarchy.
- ↑ The துருக்கி is counted amongst ஐரோப்பா, the உருசியா as a single republic, the கொசோவோ (recognised by most other European states) as an independent republic, வத்திக்கான் நகர் as an elective monarchy. The வடக்கு சைப்பிரசு (recognised only by Turkey) and all other unrecognised states are excluded from the count.
- ↑ "Inquiring Minds: Studying Decolonization." The Library of Congress Blog. July 29, 2013. Retrieved 2014-08-01.
- ↑ Hack, Karl (2008). International Encyclopedia of the Social Sciences. Detroit: Macmillan Reference USA. pp. 255–257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-865965-7.
- ↑ en:Paris Commune