உள்ளடக்கத்துக்குச் செல்

உள்மனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்மனம், நனவிலி மனம் அல்லது நனவில் மனம் (Unconscious mind அல்லது the unconscious) என்பது மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல் ஆகும். இது பரிசோதனைக்கு உட்படுத்த முடியாத ஒன்றாகும்.[1] தற்சோதனையின் கீழ் மனிதனின் உள்ளுணர்வை சில சமயங்களில் அறிய இயலும். தனி மனிதனின் சிந்தனை, நினைவு, ஆர்வம், செயலூக்கம் ஆகிய மனதின் செயல்களுக்கு இதுவே காரணமாக அமைகிறது. மனதின் முழு உணர்வுநிலைக்கு அடுத்த கீழ்நிலையில் உள்மனம் இருந்தாலும் மனிதனின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. ஒரு மனிதனின் அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகள், இயல்பான திறமைகள், அடிப்படைப் புலன்காணும் உணர்வு (Perception), எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றின் தொகுப்பே உள்மனம் என்று ஆரய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.[1] இவைகளுடன் மெய்ப்புனைவுகள், இனந்தெரியாத அச்சங்கள் மற்றும் ஆசைகளும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனநல மருத்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு மன இயக்கத்தை உள்மனம், இடைமனம், (Preconscious mind) புறமனம் (Conscious mind) என மூன்றாகப் பிரித்து, உள்மனம் என்னும் கருத்தை உருவாக்கினார்.[2] தொடக்காலத்தில் உள்மனம், இடைமனம், புறமனம் என்பன மனதின் மூன்று பிரிவுகளாகத்தான் கருதப்பட்டன. ஆனால் என்றும் அமைதியற்று இயங்கும் மனதை மூன்று வகைகளாகப் பகுக்க கூடாது; அவை மன இயக்க நிலைகள் (Mental processes) என்றும் பிராய்டு கூறியுள்ளார். கனவுகள், நையாண்டி வேடிக்கைப்பேச்சு, வார்த்தைகளில் தடுமாற்றம் போன்றவைகளால் இவ்வுள்மனம் வெளிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மனதின் மற்ற பாகங்களான உள்ளுணர்வு, உணர்வில்லாமலிருப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருப்பது, மற்றும் தெரிந்திருப்பது (Awareness) போன்றவை மனதின் உணர்வுத்தன்மை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். தூங்கும்பொழுது நடப்பது, கனவு காண்பது மற்றும் மயக்க வெறி (Delirium), புலன் மரத்த நிலை (Coma) முதலியவை உள் மனம் இருப்பதற்கு அறிகுறிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இவையே உள்மனம் அல்ல.

வரலாறு

[தொகு]

உள்மனம் என்பதற்கான சொல் -ஆங்கில மொழி: unconscious, இடாய்ச்சு மொழி: Unbewusste, 18 ஆம் நூற்றண்டில் செர்மானிய தத்துவ அறிஞர் ப்ரெடெரிக் செல்லிங்கு (Friedrich Schelling) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு கவிஞர், கட்டுரையாளர் சேமுவல் டெய்லர் கோலிரிட்சு (Samuel Taylor Coleridge) என்பவரால் ஆங்கிலத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.[3][4] 18 ஆம் நூற்றாண்டின் செர்மானிய மருத்துவர் தத்துவ அறிஞர் எர்னெச்டு பிலாண்டெர் (Ernst Platner) அபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. உள்மன எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு, ஐம்புலன்களின் தாக்கத்தினால் தூண்டப்படும் ஆசைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களை நெறிப்படுத்த ஆண்மீகம் மற்றும் கடவுள் குறித்த எண்ணங்களில் ஈடுபடுவது என்பன பற்றிய கருத்துக்கள் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. உள்மனம் குறித்த கருத்துக்கள் கிருத்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து சமய வேதங்களிலும் ஆயுர்வேத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.[5][6][7] வில்லியம் சேக்சுபியர் உள்மனம் என்று குறிப்பிடமலேயே இது குறித்து அவரது நாடகங்களில் பரவலாகப் பேசியுள்ளார்.[8] மேற்கத்திய தத்துவ அறிஞர்கள் ஆர்தர் சுகோபென்கர் (Arthur Schopenhauer), பறுச் சிபினோச (Baruch Spinoza), கோட்பிரீட் லைப்னிட்ஸ், யோஃகான் ஃவிக்டெ, எகல், சோரென் கிரிகிகார்டு (Søren Kierkegaard) , பிரீட்ரிக் நீட்சே ஆகியோரும் உள்மனம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.[9]

சிக்மண்ட் பிராய்டின் கருத்து

[தொகு]
கடலில் மிதக்கும் பனிக்குன்றிற்கு ஒப்பிட்டு சிக்மண்ட் பிராய்டு விளக்கிய  மனதின் அமைப்பு.

மன இயக்க நிலைகளைக் கடலில் மிதக்கும் பனிக்குன்றிற்கு ஒப்பிட்டால் புறமனம் என்பது கடல் நீருக்கு மேல் கண்ணில் தெரியும் சிறிய பகுதி, இடைமனம் என்பது கடல் நீருக்கு சற்று கீழே தெரியும் மங்கலான பகுதி, உள்மனம் என்பதோ கண்ணுக்குப் புலப்படமால் கடல் நீரில் அடியில் மறைந்திருக்கும் மிகப்பெரிய பகுதி. அதைப்போலவே மன இயக்கங்களிலும் மிகக் குறைவான பகுதியே (அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமான சிறு பகுதி) புறமன இயக்கமாக உள்ளது. ஐம்புலன் தூண்டுதல்களான பார்வை, செவியுணர்ச்சி, நுகர்ச்சி முதலிய உணர்வுகளுக்கு மனிதன் ஈடுகொடுத்துச் செய்யும் செயல்கள் அனைத்தும் வெளிமன இயக்கத்தின் பாற்பட்டவை. எப்போதோ நடைபெற்ற பழைய நிகழ்ச்சிகள் திடீரென நினைவிற்கு வருதல் இடைமன இயக்கத்தினால் தான். இடைமன இயக்கம் இருப்பதால் தான் பல முக்கிய நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் சிந்திப்பதன் மூலம், புறமனத்திற்கு எட்டச் செய்ய முடிகிறது. உள்மன இயக்கமோ மனதில் ஆழப் புதைக்கப்பட்டுப் புறமனதிற்கு எட்டாத நிலையில் இருக்கிறது.[2]

எனினும் உள்மனம் தான் மனிதரின் அன்றாட செயல்களுக்கும் நடத்தைக்கும், கொண்டுள்ள பல கருத்துக்களுக்கும், பிறருடன் பழகும் சமுக உறவுகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது. பண்பியல் தொகுப்பு வளரும் சமயத்தில், ஏற்படும் நிகழ்ச்சிகளினால் பலவித அனுபவங்களும், இன்பம், துன்பம், ஏமாற்றம், மனநிறைவு முதலிய நிகழ்ச்சிகளும், அன்பு, கோபம், வெறுப்பு ஆகியவை தோன்றுகின்றன. இவைகளில் மறுக்கப்படும் அல்லது ஒடுக்கப்படும் உணர்ச்சிகள் உள்மனதில் புதையுண்டு விடுகின்றன. இவ்வனுபவங்களும், உணர்ச்சிகளும் அவ்வப்போது புறமனதிற்கு எட்டுவதன் விளைவாகவே மனிதனின் அன்றாட நடவடிக்கைகளும், கருத்துகளும், குறிக்கோள்களும் உருவாகின்றன. பார்த்த மாத்திரத்தில் எந்தக் காரணமுமின்றி ஒருவரை வெறுப்பதற்கோ விரும்புவதற்கோ காரணமாக அமைவன இப்புதையுண்ட எண்ணங்கள்தான்.

கசப்பான அனுபவங்களும், துன்பங்களும் விரைவில் மறக்கும்படி மனதின் அமைப்பு உள்ளது. அவைகள் மறக்காமல் இருந்தால் அவை மனிதனை செயலற்றவனவாக்கிவிடும். இவைகள் ஆழமாக உள்மனதில் பதியப்படுகின்றன. புறமனதில் இருந்து நீக்கவும் படுகின்றன. இத்தன்மை மன நலத்திற்கு ஏற்றவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.[2]    உள்மனதில் தோன்றும் பல எண்ணங்கள் புறமனத்தைச் சென்று சேர்வதில்லை. உள்மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் புறமனதை  அடைந்து, புறமனமும் அவற்றை அசைபோட்டு செயலாற்றத் துணிந்தால் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஏனென்றால் எல்லா எண்ணங்களும் செயல் வடிவம் பெறுவதில்லை, செயல் வடிவம் பெற்றவை வெற்றியடைவதுமில்லை. ஆதலால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இதனைத் தவிர்க்கவே பல எண்ணங்கள் உள் மனதிலேயே புதைந்து விடுகின்றன.

தாயன்பை முழுவதும் தனக்கே உரிமையாக்க விழையும் மகனின் எடிபஸ் காம்ப்ளெக்ஸ் (Oedipus complex), தந்தையன்பை முழுவதும் தனக்கே உரித்தாக்க எண்ணும் மகனின் எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ் (Electra complex). ஆண்குறி தனக்கு அமையவில்லையே என ஏங்கும் சிறுமியரின் குறிப்பொறாமை (Penis envy) முதலிய பாலுணர்வுகள் பெரும்பாலும் புறமனதிற்கு எட்டுவதேயில்லை. சிக்மண்ட் பிராய்டு ஆய்ந்தறிந்த மன ஆய்வுக்கொள்கைப்படி (Psycho - Analytic Principles) மறப்பு, எண்ணத்தை அடக்கல் முதலிய செயல்களின் மூலம் மனப்போராட்டத்தை உருவாக்கும் எண்ணங்கள் உள்மனதில் புதைக்கப்படுகின்றன. எனினும் இவ்வெண்ணங்கள் அண்மைக் கால நிகழ்ச்சிகளினாலும் பட்டறிவினாலும் தூண்டப்படும்போது பயமும் பதற்றமும் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கவும், மன நிலையைச் சமன்படுத்தவும் உள்மனம் மீண்டும் முயலும்போது அவை நொண்டிக் சாக்காகக் கவன ஈர்ப்புச் செயல்களாக, எதிர்வினை அமைப்பாக, மனதளவில் வெறுக்கும் ஒருவரிடம் வெளிப்படையாக மிக அதிகமான அன்பு காட்டுதல் முதலிய இரண்டாம் நிலை மனப்பாதுகாப்பு வடிவில் வெளிப்படுகின்றன.[2]

தடையற்ற பேச்சுமுறையும், மனவசியமும் மன ஆய்வு செய்து உள்மனக்கிடக்கையை அறிய உதவுகின்றன. உள்மனதில் உள்ள எண்ணங்கள் முதல் நிலை மனப்பாதுகாப்பான எண்ண அடக்கல், இரண்டாம் நிலை மனப்பாதுகாப்பு ஆகிய முறைகளை மீறிப் புறமனதை எட்டினால் அத்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அது பின்பு பல்வேறு மனநோய்களின் அறிகுறிகளாக வெளிப்படும்.[2] தனி மனிதரின் பண்பியல் தொகுப்பிலுள்ள நிறைகுறைகளை முழுமையாக உணர உதவுவன உள்மனத் தூண்டுதல்களினால் விளையும் அவருடைய அன்றாட நடவடிக்கைகளாகும். இவற்றை நுணுகி ஆய்வு செய்வதன் மூலமாக, அகமன இயக்கத்தின் அடிப்படையைக் கண்டறிந்து, ஏற்படக்கூடியத் தீயவிளைவுகளைக் களைந்து மனநலத்தைப் பேணிக்காக்க முடியும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Westen, Drew (1999). "The Scientific Status of Unconscious Processes: Is Freud Really Dead?". Journal of the American Psychoanalytic Association 47 (4): 1061–1106. doi:10.1177/000306519904700404. http://apa.sagepub.com/content/47/4/1061. பார்த்த நாள்: June 1, 2012. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 அறிவியல் களஞ்சியம் தொகுதி 1. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வெளியிடு எண் 344. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7090-387-1.
  3. Bynum; Browne; Porter (1981). The Macmillan Dictionary of the History of Science. London. p. 292.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  4. Christopher John Murray, Encyclopedia of the Romantic Era, 1760-1850 (Taylor & Francis, 2004: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57958-422-5), pp. 1001–02.
  5. Alexander, C. N. 1990. Growth of Higher Stages of Consciousness: Maharishi's Vedic Psychology of Human Development. C. N. Alexander and E.J. Langer (eds.). Higher Stages of Human Development. Perspectives on Human Growth. New York, Oxford: Oxford University Press
  6. Meyer-Dinkgräfe, D. (1996). Consciousness and the Actor. A Reassessment of Western and Indian Approaches to the Actor's Emotional Involvement from the Perspective of Vedic Psychology. Peter Lang. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8204-3180-X.
  7. Haney, W.S. II. "Unity in Vedic aesthetics: the self-interac, the known, and the process of knowing". Analecta Husserliana  and Western Psychology: A comparison' 1934. 
  8. The Design Within: Psychoanalytic Approaches to Shakespeare: Edited by M. D. Faber. New York: Science House. 1970 An anthology of 33 papers on Shakespearean plays by psychoanalysts and literary critics whose work has been influenced by psychoanalysis
  9. Friedrich Nietzsche, preface to the second edition of "The Gay science" 1886
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்மனம்&oldid=3683188" இலிருந்து மீள்விக்கப்பட்டது