உள்ளடக்கத்துக்குச் செல்

கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபீர்
Kabir
கபீரும் அவரது சீடர்களும் (ஓவியம்)
கபீரும் அவரது சீடர்களும் (கிபி 1825 ஆண்டு ஓவியம்)
பிறப்புஅண். 1440
லகார்த்திரா, காசிக்கு அருகே (இன்றைய வாரணாசி)
இறப்புஅண். 1518
மகார்
பணிநெசவு, புலவர்
அறியப்படுவதுபக்தி இயக்கம், சீக்கியம்,
கபீரின் நினைவாக 1952இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

கபீர் (Kabīr, இந்தி: कबीर, பஞ்சாபி மொழி: ਕਬੀਰ, 1440 – 1518)[1][2][3][4] என்பவர் இந்தியாவின் ஒரு கவிஞர், மதகுரு, புனிதரும் ஆவார். இராமானந்தரால் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவரது எழுத்துக்களால் இந்து சமய பக்தி இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுதியவர். அவரது பாடல்கள் சீக்கியப் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பில் உள்ளன. காசிக்கருகே ‘லகர்டேலோ’ என்ற ஏரியில் தாமரை மலரில் கிடைத்த குழந்தையை (கபீர்) முஸ்லிம் நெசவாளர் ஒருவர் எடுத்து வளர்த்தார்.இவரது இளமைப் பருவத்தில் ஒரு இசுலாமியக் குடும்பத்தில் வளர்ந்தார். இருப்பினும் அவரது ஆசிரியரும் இந்து சமய பக்தித் தலைவருமான இராமாநந்தரின் தாக்கம் கபீரிடம் அதிகம் காணப்பட்டது.[5]

இந்து-முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார். “உண்மையே இயல்பானது. அது எல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை அன்பினால் வெளிப்படுகிறது” என்ற கருத்தை உடையவர் “பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று” என்றார்.

இந்து சமயம், இசுலாம் ஆகிய இரு சமயங்களையுமே கபீர் விமரிசித்தார். இந்து சமயம் வேதங்களால் தவறான வழியில் செல்வதாகவும், உபநயனம் போன்ற சடங்குகள் அர்த்தமற்றவை எனவும் கூறினர்.[2][5] அவரது கருத்துகளுக்காக, இந்து மற்றும் இசுலாமியர் இருவரின் கோபத்துக்கும் ஆளானார்.[6]:4 அவர் இறந்தபொழுது அவரால் ஈர்க்கப்பட்ட இரு சமயத்தை சேர்ந்தவர்களால், அவரவர் சமயத்தைச் சேர்ந்தவர் என உரிமை கொண்டாடப்பட்டார்.[3](அவரது உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற சிக்கலும் ஏற்பட்டது.)

"கபீர் பந்த்" ("Kabir panth", "Path of Kabir") என்ற சமயச் சமூகம் மூலமாக கபீரின் கருத்துக்களும் கூற்றுகளும் தொடர்கிறது. இச்சமூகத்தினர் கபீர் பந்த்தின் நிறுவனராகக் கபீரை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் இப்பிரிவினர் கபீர் பந்த்திக்கள் (Kabir panthis) என அழைக்கப்படுகின்றனர். .[7]

இராமானந்தரின் சீடரான கபீர் இந்தி மொழியில் எழுதிய இரு வரியிலான பாடல்களை தோஹே என்றழைக்கப்படுகிறது. 'தோ' என்பது இரண்டைக் குறிக்கிறது. இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் கபீரின் பெயரில் சிறந்த நெசவாளருக்கான சந்த் கபீர் விருது வழங்குகிறது. இவரது பெயரில் உத்தரப்பிரதேசத்தில் சந்த் கபீர் எனும் மாவட்டமும் உள்ளது. மேலும் கபீரின் நினைவை போற்றும் விதமாக, 1952ஆம் ஆண்டில் இந்திய அரசு கபீரின் உருவ அஞ்சல் தலை வெளியிட்டது.

இளமைக் காலமும் பின்னணியும்

[தொகு]

கபீர் பிறந்த ஆண்டும் இறந்த ஆண்டும் தெளிவாகத் தெரியவில்லை.[8][9]:14 சில வரலாற்றாளர்கள் அவர் வாழ்ந்த காலம் 1398–1448 எனக் குறிப்பிடுகின்றனர்.[6][9]:5 ஆனால் வேறுசிலர் 1440–1518 எனக் கருதுகின்றனர்.[5][9]:106[10]

அவரது பிறப்பு மற்றும் அவரது பிறந்த குடும்பம் குறித்த பலவிதமான கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றுள் ஒன்றில், கபீரின் தாய் வாரணாசியைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண் எனவும், வழக்கமான முறையின்றி கருத்தரித்து, உள்ளங்கை வழியே கபீரைப் பெற்றடுத்துப் பின்னர் அவரை ஒரு கூடையில் வைத்து குளத்தில் விட்டுவிட்டார் எனவும், அக்குழந்தையை ஒரு இசுலாமியர் எடுத்து வளர்த்தார் எனவும் கூறப்படுகிறது.[5][6]:5[6]:4–5 ஆனால் தற்கால அறிஞர்கள் இக்கதைகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையெனக் கூறி அவற்றை நிராகரிக்கின்றனர். கபீர் ஒரு நெசவாள, இசுலாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராகத்தான் பரவலாகக் கருதப்படுகிறது.[6]:3–5 வெண்டி டோனிகர் என்ற இந்தியவியலாளர் கபீர் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், இக்கதைகள் அவரை இசுலாமியத்திலிருந்து இந்து சமயத்திற்கு இழுப்பதாகவும் கருதுகிறார்.[11]

இராமாநந்தரின் சீடர்களுள் ஒருவராகத்தான் பலரும் கபீரைக் கருதுகின்றனர். இராமாநந்தர், ஒவ்வொருவருக்குள்ளும், ஒவ்வொன்றுக்குள்ளும் பரம்பொருள் இருப்பதாகக் கூறும் அத்வைதத் தத்துவத்தைப் பின்பற்றிய வைணவக் கவிஞராவார்.[3][12][13][14]

கபீரை முறையாகச் சீடராக ஏற்க இராமாநந்தர் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும், கபீர் கெட்டிக்காரத்தனத்துடன் இராமநந்தர் கங்கைக்குக் குளிக்க செல்லும் வழியிலிருந்த படிகளில் இருள்பிரியாத விடிகாலையில், சாக்கால் தன்னை மூடிக்கொண்டு கிடக்க, கீழேகிடந்த கபீரைத் தெரியாமல் மிதித்துவிட்ட இராமாநந்தர் "இராமா இராமா!" என்று சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி இராமாநந்தர் கபீரைத் தன் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று என்ற கருத்து வழக்கிலுள்ளது.

சில புராணக்கதைகள் கபீர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கின்றன. ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் வரலாற்று இலக்கியங்கள் மூலம் இது தவறான கூற்று என்றும், அவருக்குத் திருமணம் ஆகி தன்யா என்ற மனைவியும் கமல், கமலி என மகனும் மகளும் இருந்ததாகக் கருதுகின்றனர்.[15]

வாரணாசியில் கபீர் சௌரா என்ற இடத்தில் கபீரின் குடும்பம் வசித்ததாக நம்பப்படுகிறது. கபீர் சௌராவிலுள்ள கபீர் மடத்தில் கபீர் தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.[16][17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopædia Britannica
  2. 2.0 2.1 Carol Henderson Garcia; Carol E. Henderson (2002). Culture and Customs of India. Greenwood Publishing Group. pp. 70–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-30513-9. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  3. 3.0 3.1 3.2 Hugh Tinker (1990). South Asia: A Short History. University of Hawaii Press. pp. 76–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-1287-4. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  4. "Narrative Section of a Successful Application" (PDF). Claflin University. Archived from the original (PDF) on 10 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. 5.0 5.1 5.2 5.3 Kabir Encyclopædia Britannica (2015)Accessed: July 27, 2015
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Hess, Linda; Shukdev Singh (2002). The Bijak of Kabir. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120802162.
  7. David Lorenzen (Editors: Karine Schomer and W. H. McLeod, 1987), The Sants: Studies in a Devotional Tradition of India, Motilal Banarsidass Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0277-3, pages 281–302
  8. Lorenzen, David (1991). Kabir Legends and Ananta-Das's Kabir Parachai. SUNY Press. pp. 12–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4384-1127-9.
  9. 9.0 9.1 9.2 Dass, Nirmal (1991). Songs of Kabir from the Adi Granth. Albany, NY: State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0791405605.
  10. Lorenzen, David N. (2006). Who invented Hinduism?: essays on religion in history. New Dehli: Yoda Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8190227262.
  11. வெண்டி டோனிகர், The Hindus: An Alternative History, Oxford University Press (2010), p. 462
  12. Rekha Pande (2014), Divine Sounds from the Heart—Singing Unfettered in their Own Voices, Cambridge Scholars, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1443825252, page 77
  13. Ronald McGregor (1984), Hindi literature from its beginnings to the nineteenth century, Otto Harrassowitz Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3447024136, pages 43–44
  14. Islamicist Dr. Saiyid Athar Abbas Rizvi, in his A History of Sufism in India (New Delhi: Munshiram Manoharlal, 1983), Vol. II, page 412, states: "The author of the Dabistan-i Mazahib placed Kabir against the background of the legends of the Vaishnavite vairagis (mendicants) with whom he was identified, but a contemporary of his, Shaikh 'Abdu'r-Rahman Chisti, combined both the Bairagi and the muwwahid traditions about Kabir in his Mir'atu'l-asrar and also made him a Firdaussiya sufi."
  15. Lorenzen, David (1991). Kabir Legends and Ananta-Das's Kabir Parachai. SUNY Press. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4384-1127-9.
  16. Karine Schomer; W. H. McLeod (1 January 1987). The Sants: Studies in a Devotional Tradition of India. Motilal Banarsidass Publ. pp. 291–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0277-3. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  17. "Jab Mein Tha Tab Hari Nahin‚ Ab". Kabirchaura.com. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபீர்&oldid=3547821" இலிருந்து மீள்விக்கப்பட்டது