உள்ளடக்கத்துக்குச் செல்

மிதவை வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒற்றை இருக்கை கிளேசர்-டிர்க்ஸ் டிஜி-808 மிதவை வானூர்தி

மிதவை வானூர்தி (கிளைடர், Glider Aircraft) என்பது ஒருவகை வானூர்தி. காற்றை விட கனமான வானூர்தி வகையைச் சார்ந்த இது, வான் பயணத்தின் போது, இதன் ஏற்றப்பரப்புடன் காற்றின் இயங்கு எதிர்வினையால் கீழே விழாமல் தாங்கப்படுகிறது. இத்தகைய வானூர்திகளின் கட்டில்லா வான்பயணத்துக்கு பொறிகளின் (எஞ்சின்) உந்து சக்தி தேவையில்லை. ஆனால் பொறி பொறுத்தப்பட்ட வானூர்திகள் கோளாறினால் பொறி நின்று போயின் மிதவைகளாக செயல் பட வாய்ப்புண்டு. மிகப்பரவலாக அறியப்படும் மிதவை வானூர்தி காகித விமானமாகும்.

பொதுவாக இவ்வகை வானூர்திகளில் பொறிகள் பொருத்தப்படுவதில்லையென்றாலும், சில மிதவை வானூர்திகளில் தரையிலிருந்து மேலெழும்பவும், பறக்கும் போது கூடுதல் உந்து சக்தி பெறவும் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. மிதவை வானூர்திகளில் பல வகைகள் உள்ளன. சில வானிலிருந்து கீழிறங்க மட்டும் பயன்படுத்தப்படுகின்றன (வான்குடைகளைப் போன்று). வேறு சில வகைகள் வளிமண்டல நிகழ்வுகளைத் துணையாகக் கொண்டு மேலேறவும், கீழிறங்கவும், பயண திசையை மாற்றவும் செய்கின்றன. இத்தகு மிதவைகள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.