கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதியியல் துலங்கல் (Chemotaxis) என்பது ஒரு உயிரினம்வேதிப்பொருள் ஒன்றின் தூண்டலுக்கேற்ப நகர்வதைக் (இடம்பெயர்தலை) குறிக்கின்றது. உடல் உயிரணுக்கள், பாக்டீரியா, பிற ஒரு செல் உயிரி (அ) பல செல் உயிரிகள் சுற்றுச்சூழலிலுள்ள சில வேதிப்பொருள்களுக்கேற்பத் தங்களின் அசைவுகளை மேற்கொள்கின்றன. உணவைக் கண்டறிவதற்காக குளுக்கோசு போன்ற உணவுப்பொருள்கள்/மூலக்கூறுகள் அடர்த்தியாக உள்ள இடத்தை நோக்கி நீந்துவதும், ஃபீனால் போன்ற நஞ்சுகள் இருக்குமிடத்தைவிட்டு தப்பிச் செல்வதற்கும் பாக்டீரியாக்களுக்கு வேதியீர்ப்பு இன்றியமையாததாகிறது[1]. ஆரம்ப வளர்ச்சி காலகட்டங்களில் பலசெல் உயிரினங்களுக்கு வேதியீர்ப்பு அத்தியாவசமாகிறது. உதாரணமாக, கருக்கட்டலின்போது சினை முட்டையை நோக்கி விந்து செல்லுதல்; பின்வரும் வளர்ச்சி நிலைகள், இயல்பானத் தொழிற்பாடுகளில் நரம்பணுக்கள் அல்லது வெள்ளையணுக்களின்[2] இடம்பெயர்வு ஆகியவற்றைக் கூறலாம். விலங்குகளில் புற்றுநோய் உடலில் பரவும்போது இத்தகு வேதியீர்ப்புச் செயற்பாடுகள் நிலைகுலையச் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது[3].