உள்ளடக்கத்துக்குச் செல்

எம்மாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்மாவு நகரில் இயேசு இரு சீடர்களோடு உணவருந்துதல். ஓவியர்: கரவாஜ்ஜோ. ஆண்டு: 1601.

எம்மாவு (Emmaus) என்பது புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம் நகரிலிருந்து ஏறத்தாழ 7 மைல் (11 கிலோ மீட்டர்)தொலையில் உள்ளது. இந்நகரம் கிரேக்க மொழியில் Ἐμμαούς என்றும், இலத்தீனில் Emmaus என்றும், எபிரேயத்தில் חמת‎ (Hammat) என்றும், அரபியில் عِمواس‎ (Imwas) என்றும் அறியப்படுகிறது. இதன் பொருள் மித வெப்ப நீரூற்று என்பதாகும்[1].

புதிய ஏற்பாட்டில் எம்மாவு

[தொகு]

லூக்கா நற்செய்தி 24:13-35 என்னும் பகுதியில் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின்பு, எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களுக்குத் தோன்றிய செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. இதோ அப்பகுதி:

  • லூக்கா 24:13-35

எம்மாவு பற்றிய வேறு விவிலியக் குறிப்புகள்

[தொகு]

லூக்கா நற்செய்தியில் வருகின்ற எம்மாவு என்னும் நகரம் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பாக, 1 மக்கபேயர் 3:55-4:22 என்னும் பாடத்தைக் காட்டலாம். கி.மு. 166ஆம் ஆண்டளவில் யூத மக்கள் கிரேக்க ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அப்போது யூதா மக்கபேயு என்பவரின் தலைமையில் அவர்கள் செலூக்கிய கொடுங்கோலாட்சியை எம்மாவு நகரில் நிகழ்ந்த சண்டையில் முறியடித்தனர்[2].

பின்னர், செலூக்கிய தளபதி பாக்கிது என்பவர் எம்மாவு நகருக்குக் காப்புச் சுவர்கள் கட்டினார் (காண்க: 1 மக்கபேயர் 9:50). உரோமையரின் ஆட்சியின் கீழ் எம்மாவுக்குச் சிறிதளவு தன்னாட்சி இருந்தது. ஆனால் ஏரோது மன்னன் கி.மு. 4இல் இறந்ததைத் தொடர்ந்து எம்மாவு தீக்கிரையாக்கப்பட்டது.

முதல் யூத கிளர்ச்சியின்போது (கி.பி. 660-70)[3], எருசலேம் நகரை முற்றுகையிட்டு அழிப்பதற்கு முன் உரோமைப் படைகள் எம்மாவு நகரில் பாசறை அமைத்தன.

கி.பி. 221இல் எலகாபலுஸ் மன்னன் காலத்தில் எம்மாவு நகரின் பெயர் "நிக்கோபொலிஸ்" என்று மாற்றப்பட்டது. "பெருநகர்" நிலைக்கு உயர்த்தப்பட்டது. கி.பி. 639இல் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது எம்மாவு நகரில் சுமார் 25,000 மக்கள் இறந்தார்களாம்.

வரலாற்று எம்மாவு நகரை அடையாளம் காண்டல்

[தொகு]

விவிலியத்தில் வருகின்ற எம்மாவு இன்று எங்கே உள்ளது என்று நிர்ணயிப்பதில் அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. எட்வர்ட் ராபின்சன் என்னும் அறிஞர் கருத்துப்படி, விவிலிய எம்மாவு நகரம் இன்றைய அரபு-பாலஸ்தீன ஊராகிய "இம்வாஸ்" என்பதாகும். 1967இல் அழிவுறுவதற்கு முன்னால் இம்வாஸ் யூதேயா மலைப்பகுதியின் எல்லையில் எருசலேமிலிருந்து சுமார் 18 மைல் தொலையில் அமைந்திருந்தது.

எவுசேபியு, ஜெரோம் போன்ற பண்டைய கிறித்தவ அறிஞர்கள் எம்மாவு நகரும் "நிக்கோப்பொலிஸ்" நகரும் ஒன்றே என்று கருத்துத் தெரிவித்தனர். எம்மாவு வழியில் இயேசுவை சந்தித்த கிளயோப்பாவின் வீட்டில்தான் இயேசு தங்கியதாகவும், அவ்விடத்தில் 3ஆம் நூற்றாண்டில் ஒரு கிறித்தவக் கோவில் கட்டப்பட்டதாகவும் ஜெரோம் குறிப்பிட்டுள்ளார். ஆக, கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து நிக்கோப்பொலியும் எம்மாவு நகரும் ஒன்றே என்ற கருத்து பொதுவாக ஏற்கப்பட்டது. அப்பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளிலிருந்து அங்கு கி.பி. 2, 6, 12 நூற்றாண்டுகளில் கிறித்தவக் கோவில்கள் கட்டப்பட்டன என்று தெரிகிறது.

இன்றைய "அல்-குபேபே", "அபு-கோஷ்", "மோத்ஸா" என்னும் ஊர்களும் விவிலிய எம்மாவு நகரமாக இருக்கலாம் என்று வேறுபட்ட கருத்துகளும் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மாவு&oldid=2098323" இலிருந்து மீள்விக்கப்பட்டது