உள்ளடக்கத்துக்குச் செல்

குருடர் தடவிய யானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகிழக்கு தாய்லாந்தில் ”குருடர்கள் தடவிய யானை”யைக் காட்டும் ஓர் சுவர் சிற்பம்

குருடர்கள் தடவிய யானை இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றி பின்பு உலகமெங்கும் பரவிய ஒரு நீதிக்கதை. பலவகைப்பட்ட உண்மைகளையும், பொய்மைகளையும் கேட்போருக்கு உணர்த்த இது பயன்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட அனுபவம் அவரளவில் உண்மையாக இருந்தாலும், முழுமையான உண்மையை அவருக்கு உணர்த்த இயலாதது என்று காட்டுகிறது இக்கதை. ஏனெனில் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஒருவர் எடுக்கும் நிலை, பிற தரப்பு நோக்குகளையும், உண்மையின் பன்முகத்தன்மையினையும் கணக்கிலெடுக்கத் தவறுகிறது.[1][2][3]

இந்த நீதிக்கதை பலவேறு காலங்களிலும் பலவேறு துறைகளிலும் பயன்பட்டுள்ளது. சார்பியல், உண்மையின் சிக்கலான கூறவியலாத் தன்மை, பன்னோக்கு இயல்பின் தேவை, பிறருடன் தொடர்பு கொள்ளலின் அவசியம் போன்ற கருத்துகளை எடுத்துரைக்கப் பயன்பட்டுள்ளது.

சமணம், பௌத்தம், இந்து சமயம், சூபித்துவம் போன்ற பல்வேறு சமயங்களின் பக்தி, உவமை மற்றும் நீதிக் கதை மரபுகளில் இக்கதை காணப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜான் காட்பிரே சாக்சே என்ற அமெரிக்கக் கவிஞர் இக்கதையை ஆங்கிலத்தில் கவிதையாக வடித்தார். அதன் மூலம் மேற்குலகில் இது பரவலாக அறியப்பட்டது.[4] அதன் பின்னர் பல குழந்தை இலக்கியம், வயது வந்தோருக்கான இலக்கியமென பலவகைப் பாணி நூல்களிலும் இக்கதை பல முறை வெளியாகியுள்ளது.

கதை

[தொகு]

பல்வேறு சமய, பண்பாட்டு மரபுகளில் கூறப்படும் இக்கதையின் பொதுவான கூறுகள் பின்வருமாறு:

சில குருடர்கள் (அல்லது இருட்டில் சில மனிதர்கள்) ஒரு யானையைத் தடவிப் பார்க்கிறார்கள். தங்கள் கைகளின் மூலம் யானை எப்படிப்பட்டது என்று உணர முயலுகிறார்கள். ஒவ்வொருவரும் யானையின் வெவேறு உறுப்புகளைத் தடவுகிறார்கள். ஒருவர் அதன் தும்பிக்கையைத் தடவுகிறார்; இன்னொருவர் காதுகளைத் தடவுகிறார். வேறு ஒருவர் அதன் வாலினைத் தடவுகிறார். இப்படி அதன் தந்தம், கால்கள், வயிறு என வெவ்வேறு உறுப்புகளைத் தடவி தங்கள் அனுபவத்தின் மூலமாக யானை இப்படித் தான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்கிறார்கள். பின்பு அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, யானையைப் பற்றி தாங்கள் கற்றவற்றை ஒப்பிடுகையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி யானையை வர்ணிக்கின்றனர். காதைத் தொட்டவர் யானை முறம் போன்றது என்கிறார். காலைத் தொட்டவரோ யானை தூண் போன்றது என்று சொல்லுகிறார். தும்பிக்கையைத் தொட்டவருக்கு யானை மரம் போன்றதாகவும், வாலைத் தொட்டவருக்குக் கயிறு போன்றதாகவும், வயிறைத் தொட்டு பார்த்தவருக்கு சுவர் போலவும் தோன்றுகிறது. யானையைப் பற்றிய கருத்து வேறுபாடு முற்றி அவர்களிடையே சண்டை மூளுகிறது.

பல மரபுகளில் கூறப்படும் கதைகளுக்கிடையே சிறு சிறு வேறுபாடுகள் உள்ளன. தொட்டுப்பார்க்கப்படும் (யானை உடலின்) பகுதிகள், குருடர்களா அல்லது இருட்டில் மனிதர்களா?, ஒவ்வொருவருவராகத் தடவுகின்றனரா அல்லது அனைவரும் ஒரே நேரத்தில் தடவுகின்றனரா?, கருத்து வேறுபாடு கைகலப்பாக முற்றியதா அல்லது வெறும் வாய்ச்சண்டையோடு நின்றதா?. இறுதியில் அவர்கள் தங்கள் முரண்களைத் தீர்த்துக் கொண்டனரா? போன்ற சிறு தகவல்கள் மாறுகின்றன. சில மரபுகளில் இறுதியில் குருடர்கள் ஒன்று கூடி யானையின் தன்மையை உணரக் கூட்டாக முயலுகின்றனர், வேறு சில மரபுகளில் அவ்வழியே செல்லும் (கண்பார்வை உடைய) வழிப்போக்கன், அவர்கள் சண்டைக்கு தீர்ப்பு வழங்குகிறார்.

சமண மரபு

[தொகு]

பௌத்த மரபு

[தொகு]

இந்து மரபு

[தொகு]

சூபி மரபு

[தொகு]

மேற்குலகில்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hope B. Werness (2006). Continuum Encyclopedia of Animal Symbolism in World Art. A&C Black. pp. 15–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-1913-2.
  2. Eugene Watson Burlingame (1922). Buddhist Parables. Motilal Banarsidass Publ. pp. 76–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0738-9.
  3. Lloyd Ridgeon (8 December 2003). Major World Religions: From Their Origins To The Present. Routledge. pp. 63–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-42935-6.
  4. Martin Gardner (1 September 1995). Famous Poems from Bygone Days. Courier Dover Publications. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-28623-5. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.