உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கியம்

விக்கிமேற்கோள் இலிருந்து

இலக்கியம் பற்றிய பலரது மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  • "இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது; அது மனிதனது ஆன்மாவையும், அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும், சொல்-வடிவிலே காட்டும் குறிப்பாகும்; ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே; அதன் சிறப்பு-இயல்புகள் கலையழகும், சிறப்பாற்றலும், நிலைபேற்றுப் பண்புகளும் ஆகும். அதன் அளவு-கருவிகள் அதனுடைய அகிலத்துவமும், அதன் தனிப்பட்ட நடையமைப்பும் ஆகும். அதன் பயனாவது நம்மை இன்புறுத்தலே அன்றி, மனிதனது உண்மை இயல்பை அறிவுறுத்துதலும் ஆகும். அதாவது மனிதனுடைய செயல்களைக் காட்டிலும் அவனது ஆன்ம இயல்பினை உணர்த்துவதுதான் அதற்குச் சிறந்த பயன் எனக் கொள்ளுதல் வேண்டும்".[1]
  • "இலக்கிய ஆராச்சியில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரும் பண்பாடு வேண்டும். ஒரு புலவரின் சிறப்பு என்று ஒருவர் கருதுவதையே புலவரின் குறை என்று மற்றொருவர் கருதுமளவுக்கும் வேறுபாடு காணப்படும். இத்தனைக்கும் ஒரு நாடு இடங்கொடுத்தால்தான் அந்த நாடு இலக்கிய ஆராய்ச்சியில் சிறந்து விளங்க முடியும்".[2]
  • நம் கைகள் தாங்கும் புத்தகத்தில் குதிரையின் குளம்படியோசையையும், மரங்கள்மேல் அமர்ந்த பறவைகளின் ஓசையையும், மலர்களின் சுகந்தத்தையும் நாம் உணர்கிறோம்... பார்க்கிறோம். வார்த்தைகளால் சொல்லமுடியாத கற்பனைகளில் நாம் சஞ்சரிக்கிறோம். இனம்புரியாத உணர்ச்சியில் நாம் சந்தோஷப்படுறோம். எது உங்களை சந்தோஷப்படுத்துகிறது? அந்த உணர்ச்சிதான் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
  • ஒரு பறவையின் சிறகடிப்பையோ, கூழாங்கல்லின் மௌனத்தையோ, ஒரு புள்ளிமானின் தாவலையோ, ஒரு மழைத்துளியின் அழகையோ, கடலின் பெருங்கோபத்தையோ இலக்கியம் அல்லாத நூல்களால் சொல்லமுடிவதில்லை. அதை இலக்கியம்தான் நமக்குள் சித்திரமாக வரைந்துவிடுகிறது.
  • இலக்கியம் என்பது வேறு எதுவுமில்லை. அது மனிதகுலத்தின் மனசாட்சி. பிரபஞ்சத்தில் தூய்மையை விரும்பும் ஆன்மா. நம் மனதின் மேல் விழும் ஓர் அருவி.
  • நல்ல இலக்கியமென்றால், எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக்கொண்டாலும் இவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும். பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல, எத்தனைபேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டையாகி விடாது. -புதுமைப்பித்தன்[3]
  • ஒரு சமுதாயத்தின் இலக்கியம் அதன் தேசியப் பான்மையிலிருந்து தோன்ற வேண்டும். தேசியப் பான்மை தன்மான உணர்ச்சியில்லாமல் ஏற்பட முடியாது. தன்மானம் சுதந்தரமில்லாமல் தோன்ற முடியாது. - திருமதி ஸ்டோ [4]
  • செய்த வேலையின் நன்மையை அளந்த பார்த்துக் கூலி கொடுக்கப்பெறாத ஒரு தொழில் இலக்கியந்தான். - ஃபுளுட்[4]
  • இலக்கியம் வாழ்க்கையின் முழு வேலையாக அமைந்தால் அது ஊழிய வேலையாகவே இருக்கும். குறித்த நேரங்களில் மட்டும் நாம் அதில் ஈடுபட்டால், அது நேர்த்தியான ஓய்வளிப்பதாயிருக்கும். - ரோஜர்ஸ்[4]
  • நூல்கள் அவைகளின் ஆசிரியர்களைப்பற்றி ஓரளவுதான் தெரிவிக்கும்; ஆசிரியன் எப்பொழுதும் தன் நூலைவிட மேலானவனாகவே இருப்பான். - போவீ[4]
  • குடும்பத்தின் இலக்கியத்தைக் கட்டுப்படுத்த எனக்கு அதிகாரமிருந்தால், நான் இராஜ்யத்தின் நன்மையையும் சமயத்தில் நன்மையையும் பாதுகாக்க முடியும். - பேக்கன்[4]
  • விஞ்ஞானத்தில் மிகப்புதியனவாக வந்துள்ள நூல்களைப் படியுங்கள். இலக்கியத்தில் பழையவைகளைப் படியுங்கள். உயர்தர இலக்கியம் எப்பொழுதும் நவீனமாகவே இருக்கும். - புல்வர்[4]
  • இலக்கியத்தின் நலிவு தேசத்தின் நலிவாகும் வீழ்ச்சியில் இரண்டும் சேர்ந்தேயிருக்கும். -கதே[4]
  • இலக்கியம் பயில்வது இளைஞர்களுக்கு வளர்ச்சியளிக்கும். முதுமைப் பருவத்தில் விருந்தாக விளங்கும் செழுமையை அலங்கரிக்கும்; வறுமையில் ஆறுதலளிக்கும். வீட்டில் இன்பமளிக்கும் வெளியில் எங்கே செல்லவும் உரிமை அளிக்கும். - ஸிஸரோ[4]
  • இன்று இலக்கியத்தில் ஏராளமான கொற்றர்கள் இருக்கின்றனர். ஆனால், கைதேர்ந்த சிற்பிகள்தாம் குறைவாயுள்ளனர். . ஜோபெர்ட்[4]
  • நீ படைக்கும் இலக்கியப் படைப்புகளை ஒன்பது ஆண்டுகளாவது மக்களிடம் வெளியிடாமல் மறைத்து வைத்திரு. - ஹொரேஸ்[4]
  • பேச்சை நித்தியமாக்கி வைப்பது இலக்கியம். - ஷிலிகெல்[4]

சான்றுகள்

[தொகு]
  1. எஸ். வையாபுரிப் பிள்ளை, "இலக்கியச் சிந்தனைகள்" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கியமாவது யாது?, நவபாரதி பிரசுராலயம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை.
  2. டாக்டர் மு. வரதராசன், "இலக்கிய ஆராய்ச்சி" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கிய ஆராய்ச்சி, பாரி நிலையம், சென்னை. ஏழாம் பதிப்பு 1999.
  3. 3.0 3.1 முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 49. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105-106. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் இலக்கியம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இலக்கியம்&oldid=38336" இலிருந்து மீள்விக்கப்பட்டது