திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.[1]
ஆசிரியர் குறிப்பு
[தொகு]பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் சைவ வேளாளர் குலத்தில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. இவர் இயற்றிய வேறுநூல்கள்:
1)திருவிளையாடற்போற்றிக் கலிவெண்பா 2)மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி 3)வேதாரணிய புராணம்
இவரது காலம்:கி.பி.17-ஆம் நூற்றாண்டு என்பர்.
நூல் அமைப்பு
[தொகு]மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றிச் சொன்னார் என்றும், அதை வியாசருக்குச் சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.
ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344-ஆவது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் தொடங்குகிறது.
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30படலங்கள் திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள்
காப்பிய உறுப்புகள்
[தொகு]- காப்பு
- வாழ்த்து
- நூற்பயன்
- கடவுள்வாழ்த்து
- பாயிரம்
- அவையடக்கம்
- திருநாட்டுச்சிறப்பு
- திருநகரச் சிறப்பு
- திருக்கயிலாயச் சிறப்பு
- புராண வரலாறு
- தலவிசேடம்
- தீர்த்தவிசேடம்
- மூர்த்தி விசேடம்
- பதிகம்
படலங்கள்
[தொகு]முதல் பகுதியான மதுரைக் காண்டம் இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை 18 படலங்களைக் கொண்டுள்ளது. அடுத்த கூடற் காண்டம் நான்மாடக் கூடலான படலம் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரையான 30 படலங்களையும், மூன்றாவது பகுதியான திருவாலவாய்க் காண்டம் திருவாலவாயான படலம் முதல் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் வரை 16 படலங்களையும் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 64 படலங்கள் அமைந்துள்ளன.
64 திருவிளையாடல்கள்
[தொகு]திருவிளையாடற்புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.
- இந்திரன் பழி தீர்த்த படலம்.
- வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.
- திருநகரங்கண்ட படலம்.
- தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்.
- தடாதகையாரின் திருமணப் படலம்.
- வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.
- குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்.
- அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்.
- ஏழுகடல் அழைத்த படலம்.
- மலயத்துவசனை அழைத்த படலம்.
- உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்.
- உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்.
- கடல் சுவற வேல்விட்ட படலம்.
- இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.
- மேருவைச் செண்டாலடித்த படலம்.
- வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்.
- மாணிக்கம் விற்ற படலம்.
- வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்.
- நான் மாடக்கூடலான படலம்.
- எல்லாம் வல்ல சித்தரான படலம்.
- கல் யானைக்குக் கரும்பு தந்த படலம்.
- யானை எய்த படலம்.
- விருத்த குமார பாலரான படலம்.
- கால் மாறி ஆடிய படலம்.
- பழியஞ்சின படலம்.
- மாபாதகம் தீர்த்த படலம்.
- அங்கம் வெட்டின படலம்.
- நாகமேய்த படலம்.
- மாயப்பசுவை வதைத்த படலம்.
- மெய் காட்டிட்ட படலம்.
- உலவாக்கிழி அருளிய படலம்.
- வளையல் விற்ற படலம்.
- அட்டமாசித்தி உபதேசித்த படலம்.
- விடையிலச்சினை இட்ட படலம்.
- தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்.
- இரசவாதம் செய்த படலம்.
- சோழனை மடுவில் வீட்டிய படலம்.
- உலவாக் கோட்டை அருளிய படலம்.
- மாமனாக வந்து வழக்குரைத்த படலம்.
- வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்.
- விறகு விற்ற படலம்.
- திருமுகம் கொடுத்த படலம்.
- பலகை இட்ட படலம்.
- இசைவாது வென்ற படலம்.
- பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்.
- பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்.
- கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
- நாரைக்கு முத்தி கொடுத்த படலம்.
- திருவாலவாயான படலம்.
- சுந்தரப்பேரம் செய்த படலம்.
- சங்கப்பலகை கொடுத்த படலம்.
- தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்.
- கீரனைக் கரையேற்றிய படலம்.
- கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.
- சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்.
- இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்.
- வலை வீசின படலம்.
- வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்.
- நரி பரியாக்கிய படலம்.
- பரி நரியாக்கிய படலம்.
- மண் சுமந்த படலம்.
- பாண்டியன் சுரம் தீர்த்த படலம்.
- சமணரைக் கழுவேற்றிய படலம்.
- வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.
நூல் சிறப்பு
[தொகு]இந்நூல் மதுரையின் தலபுராணமாகவும் போற்றப்படுகிறது.
வரலாறு
[தொகு]சிவபெருமான் உமாதேவியாருக்கு சங்கர சங்கிதையை அருளிச்செய்தார்.முருகப்பெருமான் அதனை அகத்திய முனிவருக்கு அருளினார். அகத்திய முனிவர் பிற முனிவர்களுக்கு எடுத்துக்கூறினார்.திருவிளையாடற் புராணங்களில் மூர்த்தி, தல, தீர்த்த விசேடமுள்ள திருப்பூவணத்துடன் (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம்) தொடர்புடைய பகுதிகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.இத்தலத்திலே சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்கள் இப்புராணத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.
நான்கு திருவிளையாடல் புராணங்கள்
[தொகு]நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன. இவற்றுள் புலியூர் நம்பி என்பவரும் பரஞ்சோதி முனிவர் என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை. பரஞ்சோதி முனிவர் எழுதியது சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.
- கல்லாடம் 30 திருவிளையாடல்களைக் குறிப்பிடுகிறது.
- பழைய திருவிளையாடல் புராணம் - நம்பியாண்டார் நம்பி பாடியது. 64 திருவிளையாடல்களை விரித்துக் கூறும் முதல் நூல் [2]
- திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - பெரும்பற்றப் புலியூர் நம்பி
- கடம்பவன புராணம் - தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்
- சுந்தர பாண்டியம் - தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன்
- திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202162.htm
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 106.
{{cite book}}
: Check date values in:|year=
(help)